அரசின் தோல்வியா?

லகில் இதுவரை ஏற்படாத ஒரு பேரிடர் தான் இந்த கொரோனா என்றால் அது மிகை படுத்திய தகவல் அல்ல. அதுவே உண்மை. இதற்கு முன்னால் இது போன்றதொரு கொடிய பேரிடரை இவ்வுலகம் கண்டிருக்க வாய்ப்பில்லை.

பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், புயல், என அனைத்து பேரிடர்களும் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பாதிக்கக் கூடியதாக இருந்தது. சுனாமி வந்தபோது கூட உலகின் சில குறிப்பிட்ட பகுதியை மட்டுமே தாக்கியது. இவற்றையெல்லாம் ஒப்பிடும்போது தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோணா (Covid 19) நோய் என்ற பேரிடர் ஒட்டு மொத்த உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் மாபெரும் பேரிடரே.

இந்நிலையில் நமது நாட்டில் இந்தக் கொரோனா வைரசை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை ஒவ்வொரு நாளும் அறிந்து வருகிறோம். ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் அரசின் தோல்வியா? அல்லது பொதுமக்களின் விழிப்புணர்வின்மையா? என்றால் அது அரசின் தோல்வி என்பதே சரியானது.

உலகின் பல பகுதிகளிலும் நோய்த்தொற்று உருவாகி பாதிக்கப்பட்டு கொண்டிருக்கக் கூடிய வேளையில் ரஷ்யா, தென் கொரியா போன்ற நாடுகள் எல்லாம் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கிய நேரத்தில் நமது நாட்டின் அரசு குறிப்பிட்ட சமூக மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி கலவரங்களை நடத்திக் கொண்டிருந்தது. அப்போது போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இன்று இவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்பட்டிருக்குமா?

அன்றே வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை முழுமையாக பரிசோதித்து நாட்டிற்குள் அனுமதித்திருந்தால் இன்று நம் நாடு அமைதியானதாக, பாதுகாப்பானதாக இருந்திருக்கும். ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதே நமது அரசின் கொள்கையாகவே ஆகிவிட்டது. இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உணவுக்கு வழியில்லாமல் திண்டாடும் பல நடுத்தர மக்கள் வேறுவழியின்றி வெளியில் செல்லவேண்டிய நிலை ஏற்படுவதற்கு காரணம் அரசா பொது மக்களா?

இந்நாடு பணக்காரர்களுக்கான நாடு மட்டும் என்று அறிவித்துவிட்டு உங்கள் அடாவடிகளை அரங்கேற்றுங்கள். வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் பணக்கார இந்தியர்களை காப்பதற்கு ராணுவ விமானங்களை பயன்படுத்தும் அரசு சொந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு வழியற்று நிற்கும் ஏழை மக்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க என்ன நடவடிக்கை எடுத்தது? அன்றாடக் கூலி தொழிலாளிகள் இன்று மூன்று வேளை உணவு இல்லாமல் தெருத்தெருவாக காவல்துறையின் கண்ணில் படாமல் சுற்றிக் கொண்டிருக்க கூடிய ஒரு அவலத்தை இந்நாடே பார்த்து வருகிறது. அவர்களின் வாழ்வுரிமை இன்று கேள்விக்குறியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது. அன்றாடம் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்திய லட்சக்கணக்கான யாசகர்கள் நிலைகுறித்து என்றாவது அரசு கவலைப்பட்டு இருக்குமா?

மேலும் அரசிடம் நிதி இல்லையாம் மக்களிடம் கேட்கிறார்கள். கேட்பவர்கள் யாரென்றால் சுங்கச்சாவடி என்ற பெயரில் வழிப்பறியில் ஈடுபட்டும், ஜிஎஸ்டி என்ற பெயரில் அதிக வரிகளை மக்கள்மீது சுமத்தியும், வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்தில்லாத ஏழைகளிடம் அபராதம் சுமத்தியும் மக்களின் உழைப்பை சுரண்டும் அரசு. “ஊர் சுற்றவும், சிலைகள் வைக்கவும், அதாணிக்கும் அம்பானிக்கும் கடன் கொடுக்கவும், எம்பி, எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கவும், அமெரிக்க அதிபரின் கண்ணில் படாமல் ஏழைகளை மறைக்க சுவர் எழுப்புவதற்காகவும், லட்சம் கோடிகளை அள்ளிக் கொடுத்தவர்கள் இன்று பிச்சை எடுக்கிறார்கள்.

எப்படி கடந்த 6 ஆண்டாக சரிந்து சின்னா பின்னமான பொருளாதார வீழ்ச்சியை கொரோனா மீது சுமத்தி அரசின் தோல்வியை மறைத்தார்களோ அவ்வாறே மக்கள், சட்டத்தை மதிக்க வில்லை என்று மக்கள் மீது பலியை போட்டு தப்பிக்க பார்க்கின்றது அரசு. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல… தக்க நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுத்தே தீருவார்கள்.

ஆக்கம்

முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

1 thought on “அரசின் தோல்வியா?

Leave a Reply

Your email address will not be published.