சமுதாய சொந்தங்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் அவனது முதல் இல்லமான காபாவை தரிசிக்க உம்ரா செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ரமலான் பிறை 5ல் பயணத்தை முடிவு செய்தேன். நல்லபடியாக உம்ராவை முடித்தேன். அல்ஹம்துலில்லாஹ்…
அந்த உம்ரா பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டு இப்பதிவை பதிவதுடன். இப்பயணத்தில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள எண்ணுகின்றேன்.
ஒவ்வொரு முஸ்லிமின் கணவு, வாழ்வில் ஒருமுறையேனும் அல்லாஹ்வின் புனித மற்றும் முதல் இல்லமான காபாவை தரிசித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது தான். அதே பேரவாவுடனும் எல்லோருக்கும் கிடைத்துவிடாத வாய்ப்பு அல்லாஹ்வின் அருளால் தனக்கு கிடைத்துள்ளதே என்ற சந்தோசத்துடனும் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தேன்.
கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில் வாய்ப்பை தவறவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை அப்போது நினைத்துப் பார்த்தேன். இப்போதும் பல தடைகள் ஏற்பட்டது. அல்லாஹ்வின் உதவியால் அனைத்து தடைகளையும் தாண்டி ஒருவழியாக உம்ராவிற்கான தயாரிப்புகளோடு பயணத்தை தொடர்ந்தேன்.
பேருந்து நிலையத்திற்கு சென்று மக்கா செல்லும் பேருந்தில் ஏறினேன். எதனை இஸ்லாம் தடை செய்ததோ அது தான் உரத்த சப்தத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது. இசை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டாலும் நமது சமூகம் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளுவதில்லை என்பதை சற்று உரக்க உணர்த்துவதாய் இருந்தது. இசையை ரசித்துக்கொண்டிருந்தவர் உம்ராவிர்காக இஹ்ராம் அணிந்த நிலையில் இருந்தார். சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.
சமூகம் எங்கே செல்கிறது என்ற கேள்விகளோடு பேருந்தில் இருக்கையை தேடினேன். கழிவறை அருகில் ஒரு இருக்கை மீதமிருந்தது அதிலேயே அமர்ந்தேன். பேருந்து புறப்பட்டது தான் தாமதம் வரிசை கிரமமாக ஒவ்வொரு நபராக இஹ்ராம் அணிந்த நிலையில் கழிவறை செல்வதும் புகை பிடித்து திரும்புவது கண்டு கொஞ்சம் நெஞ்சம் வலிக்கத்தான் செய்தது. ஒருவழியாக பாதி தூரத்தை கடந்தோம்.
சப்கோ உணவகத்தில் பேருந்து நிருத்தப்பட்டு சஹர் உணவு சாப்பிட இறங்க ஓட்டுநர் சொன்னதுதான் தாமதம் மலமலவென பேருந்திலிருந்த அனைவரும் இறங்கினர். நானும் இறங்கி உணவகத்திற்குள் சென்றேன். அங்கேயும் ஒரே ஆச்சர்யம் மலமலவென இறங்கியவர்கள் எங்கே…? வேரு உணவகத்திற்கு சென்றுவிட்டனரா? என்ற கேள்விகளோடு எனது சஹர் உணவை வாங்கி சாப்பிட்டு முடித்துவிட்டு, பேருந்தை நோக்கி நடந்தேன்.
பேருந்தை விட்டு இறங்கியவர்கள் எங்கே என்ற என் கேள்விக்கு பதில் கிடைத்தது. பேருந்தின் பின் பக்கம் சென்று 3 பேர் 4 பேர் என குழு குழுவாக புகை பிடித்தல், பான் பராக் போடுதல், புகையிலை பொருட்களை கைகளின் மையத்தில் வைத்து நசுக்கி உதடுகளில் திணித்தல் என படு பிஸியாக காணப்பட்டனர். இதில் மன இருக்கத்தோடு நான் பதிவது அனைவருமே உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்த நிலையில் இந்த கேடித்தனங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தனர்.
ஒரு சிலர் மட்டும் சஹர் உணவை முடித்துக்கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்துவிட்டனர். அவர்களோடு நானும் பேருந்தில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் அனைவரும் பேருந்தில் ஏறி அமர பேருந்து மீண்டும் புற்ப்பட்டது.
விடியற்காலை ஃபஜ்ர் நேரம் மக்காவின் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்த மஸ்ஜித் அருகில் பேருந்து நிருத்தப்பட்டு தொழுகைக்காக அனைவரும் இறங்கினர். இங்கு நடந்த கொடுமையை என்னவென்று சொல்வது…
சுப்ஹானல்லாஹ்…
சஹர் உணவை உண்டு நோன்பு நோற்றிருந்த மூன்று பேர் ஃபஜ்ர் பாங்கு சொல்லப்பட்ட பிறகும் புகை பிடித்துக்கொண்டிருந்தனர்.
உம்ரா செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. அல்லாஹ் அந்த வாய்ப்பை நமக்கு வழங்கி இருக்கின்றான் என்றால் அதனை இப்படியா பயன்படுத்துவது?
சமூகம் சற்று சிந்திக்க வேண்டும்.
பயனற்ற யாத்திரைக்காக பழனிக்கும் திருப்பதிக்கும் காசிக்கும் செல்லும் காஃபிர்கள் (அல்லாஹ்வை மறுப்பவர்கள்) கூட கல்லை கடவுளாக கருதி அந்த கடவுளுக்கு பயந்து, பணிந்து, தினம் தினம் அடிமைபட்டு கிடந்த பீடி, சிகரெட், மது , போதை பொருள் என அனைத்தையும் தவிர்த்து, உண்ணும் உணவில் கூட மாமிசத்தை தவிர்த்து, ஒருவரை ஒருவர் மரியாதை நிமித்தமாக சாமி என அழைப்பது என ஒரு ஒழுக்கத்தை பேணுவதை சற்று இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.
- தந்தை சொன்ன வேலையை முடிக்காத மகன் தந்தைக்கு பயப்படுகின்றான்.
- ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தை முடிக்காத மாணவன் ஆசிரியருக்கு பயப்படுகின்றான்.
- அரசு ஒரு உத்தரவை பிரப்பித்தால் அதனை உடனே அமல் படுத்தி அரசுக்கு பயப்படுகின்றான்.
- காவல் துறை ஏதோ ஒன்றை தடை செய்தால் அதனை ஏற்று நடந்து காவல் துறையின் மீது தன் பயத்தை வெளிக் காட்டுகின்றான்.
- ஆனால் படைத்தவன் சொல்வதை செய்யாத மனிதன் படைத்தவனுக்கு பயப்படுவதில்லை.
சமூகம் திருந்த இன்னும் வாய்ப்பை அல்லாஹ் அளித்துள்ளான்… பயன்படுத்திக்கொண்டால் வெற்றியடைவாய்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்.