Indian Police | இந்திய காவல்துறையின் கொலைமுகம்
சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் அராஜகப் போக்கு எந்தளவுக்கு கட்டுக்கடங்காமல் இருக்கின்றது என்பதற்கு பல்வேறு சான்றுகளை சொல்ல முடியும்.
அதில் சிலவற்றை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொருளடக்கம்
பொருளடக்கம்
ஒரிஷாவின் முதல் ஆட்சியர் கொலை
1966 – முதல் ஒரிஷா ஆட்சியாளரும், பஸ்தார் மாநிலத்தின் 20 வது மகாராஜாவுமான பழங்குடியின மக்களுக்காக போராடிய பிரவீர் சந்திர பஞ்ச் தியோ, ஜக்தல்பூரில் உள்ள தனது சொந்த அரண்மனையின் படிகளில் இந்திய காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
பாகல்பூரில் விசாரணைக் கைதிகளின் கண்களில் ஆசிட் ஊற்றிய காவல்துறை (Indian Police)
1979-1980 ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் பாகல்பூரில் 31 விசாரணைக் கைதிகளின் கண்களில் ஆசிட்டை ஊற்றி கண்மூடித்தனமாக குருடர்களாக மாற்றியது இந்திய காவல்துறை.
மீரட் 42 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை
மே 22 1987 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் 42 முஸ்லிம் இளைஞர்களை காசியாபாத் மாவட்டத்தில் முராத் நகருக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்கு லாரிகளில் அழைத்துச் சென்று அங்கு அந்த 42 முஸ்லிம் இளைஞர்களும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு கால்வாய்களில் வீசப்பட்டார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு கால்வாய்களில் மிதந்து வந்த சடலங்களை கண்டெடுக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது. 28 ஆண்டுகளுக்குப் பின்னால் குற்றவாளியான காவல்துறையினர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் அல்ல என்று விடுவிக்கப்பட்டனர்.
பீகாரில் 900 முஸ்லிம்கள் படுகொலை
1989 ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 24ம் தேதி முதல் தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை நடைபெற்ற இனக்கலவரத்தில் 900த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதில் காவல்துறையின் அதீத பங்களிப்பு வெட்ட வெளிச்சமானது.
காந்தி ஜெயந்தி துப்பாக்கிச்சூடு
அக்டோபர் 1 1994 உத்தரப்பிரதேசம் முசாபர்நகரில் உள்ள ராம்பூர் தீரா பகுதியில் காந்தி ஜெயந்தி அன்று உத்தரகாண்ட் ஆர்வலர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்தனர்.
இந்த ராம்பூர் தீரா துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். காவல்துறையால் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள்.
கண்ணூர் படுகொலை
நவம்பர் 25 1994 அன்று கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் கூத்துப்பரம்பாவில் பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
தமிழ்நாடு காவல்துறையின் மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை
ஜூலை 23 1999 அன்று 30 ரூபாய் ஊதிய உயர்வு கேட்டு போராடிய திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி தாமிரபரணி ஆற்றுக்குள் விரட்டியடித்தது. இதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேரை படுகொலை செய்தது இந்த காவல்துறை.
குஜராத் காவல்துறையின் இனப்படுகொலை
பிப்ரவரி 28 2002 ல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் முஸ்லிம்கள்மீது இனவெறி தாக்குதல் நடைபெற்ற சமயத்தில் காவல் துறையும் தன் பங்குக்கு 77 அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக்கொன்றனர்.
கேரள காவல்துறையின் முத்தங்கா ஆதிவாசிகள் படுகொலை
2003 ம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முத்தங்கா வனப்பகுதியில் வசித்த ஆதிவாசி சமூகங்களை வனப்பகுதியை விட்டு வெளியேற்ற காவல்துறை மேற்கொண்ட மிருகத்தனமான தாக்குதலில் ஆதிவாசி மக்கள் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர்
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்வதற்கு சதி திட்டம் ஆகிய பொய் வழக்குகளை பதிந்து சொராபுதீன் ஷேக் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சில நாட்கள் கழித்து அவர் மனைவியும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இறுதியாக படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி இருவரும் குற்றமற்றவர்கள் என்றும் இது ஒரு திட்டமிடப்பட்ட போலி என்கவுண்டர் என்றும் உறுதிசெய்யப்பட்டது.
இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பின்னணியில் இருந்து செயல்பட்டதாக கைதுசெய்யப்பட்டு பின்னால் அவரும் விடுதலை செய்யப்பட்டார்.
அந்த வழக்கை விசாரித்து விட்டு நீதிபதிகள் சொன்ன வார்த்தை ஒரு நீதிபதியின் வார்த்தையா? என்ற கேள்வியை எழுப்பும்.
உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்.
ஆனால் எனக்கு வேறு வழியில்லை. தங்கள் முன்பு வைக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. அத்தகைய ஆதாரங்கள் எதுவும் இல்லை, என்று நீதிபதி ஜேஎஸ் வர்மா தனது தீர்ப்பில் கூறினார்.
புனே காவல்துறையின் வீடியோகான் துப்பாக்கிச்சூடு
2006 ஆம் ஆண்டு புனேவில் உள்ள மான் கிராமத்தில் வீடியோகானின் Special economic zone க்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்தனர். இன்றளவும் ஊனத்தோடு வாழ்ந்து வரக்கூடிய நிலையில் அந்த மக்கள் உள்ளனர்.
மேற்கு வங்க காவல்துறையின் நந்திகிராம் படுகொலை
2007 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூரிலுள்ள நந்திகிராம் கிராமத்தில் கெமிக்கல் ஹப் என்ற நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்னும் கடும் வன்முறைகளையும் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது.
கேரளா பீமாபள்ளி முஸ்லிம்கள் படுகொலை
2009 ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பீமாபள்ளி என்ற மீன்பிடி கிராமத்தில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேரை படுகொலை செய்தனர் 46 பேரை காயமடையச் செய்தனர் இந்த காவல்துறையினர்.
மணிப்பூர் போலீஸ் கமாண்டோக்கள் நடத்திய படுகொலை
2009 ஜூலை மாதம் மணிப்பூரில் போலீஸ் கமாண்டோக்கள் நடத்திய என்கவுண்டரில் கர்ப்பிணிப் பெண் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஜெய்ப்பூர் அணுமின் நிலையம் படுகொலை
2011 ஆம்ஆண்டு ஜெய்ப்பூர் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இந்த காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
ஃபோர்பஸ் கன்ச் கிராமவாசிகள் படுகொலை
2011 ஜூன் மாதம் பீகார் மாநிலம் ஃபோர்பஸ் கன்ச் பகுதியில் பாஜகவை சேர்ந்த அசோக் அகர்வாலின் மகனுக்கு சொந்தமான தொழிற்சாலைக்கு நிலம் வாங்குவதை எதிர்த்து பஜன்பூர் கிராமவாசிகள் போராடிய சமயத்தில் ஃபோர்பஸ் கன்ச் என்ற பகுதியில் காவல்துறையினரின் மிருகத்தனமான துப்பாக்கிச்சூட்டில் 4 கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மகாராஷ்டிரா காவல்துறையின் முஸ்லிம்கள் படுகொலை
2013ம் ஆண்டு மகாராஷ்டிரா துலே பகுதியில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தையே துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழு முஸ்லிம்களை படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல் 175 பேர் வரை காயம் அடையச் செய்தனர்.
மேலும் முஸ்லிம்களின் கடைகளை கொள்ளையடிப்பதில் காவல்துறையினரும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்தனர்.
தமிழ்நாடு காவல்துறையின் சிறுவன் மீதான துப்பாக்கிச்சூடு
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி அன்று சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் 15 வயது தமீம் அன்சாரி என்ற சிறுவனை குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ் வாயில் துப்பாக்கியால் சுட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
எஸ்பி பட்டினம் காவல்துறையின் முஸ்லிம் இளைஞர் படுகொலை
அதுபோல 2014 அக்டோபர் 14ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து 22 வயது செய்யது முஹம்மது என்ற இளைஞரை காவல்துறையினர் படுகொலை செய்தனர்.
செம்மரக் கடத்தல் பெயரில் ஆந்திர காவல்துறையின் படுகொலை
2015 ஆண்டு ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் காட்டில் செம்மரக்கட்டை கடத்தியதாக சொல்லி 20 தமிழர்களை படுகொலை செய்தது ஆந்திர காவல்துறை.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் படுகொலை
2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் 13 பேர் தமிழ்நாடு காவல்துறையால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
டெல்லி ஜாமியா மில்லியா வளாகத்தில் அராஜகம்
2019 டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போது ஜாமியா மில்லியா இஸ்லாமியா வளாகத்தில் மாணவர் போராட்டக்காரர்களை மூர்க்கத்தனமாக வேட்டையாடியது டெல்லி காவல்துறை.
கொரோனாவிலும் மனிதாபிமானமற்ற குஜராத் காவல்துறை
2020 கொரோனா பாதிப்பால் வேலை இழந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முற்பட்டபோது குஜராத் காவல் துறையால் கொடூரமாக தாக்கப்பட்டார்கள்
சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை
பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்ற வகையில் கடந்த 22ஆம் தேதி சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவர் படுகொலையை இனிதே நிறைவேற்றி இருக்கிறார்கள் தமிழக காவல்துறையினர்.
இந்தப் படுகொலையில் புதிய விஷயமாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்று சொல்லக்கூடிய ஆள்காட்டிகளுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக சில செயல்களையும் காவல்துறை செய்திருக்கிறது என்பது அப்பட்டமான மன நோயின் அறிகுறி என்று சொல்லலாம்.
இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். அவ்வளவு படுகொலைகளை செய்துள்ளது இந்திய காவல்துறை. இதற்கெல்லாம் ஒரு முடிவில்லையா என்றால். உண்டு…
தீர்வு
இதற்கான தீர்வு காவல்துறை சட்டங்கள் மாற்றியமைக்கப்படுவது மட்டுமே. வானலாவிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் இல்லையெனில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் தொடரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மக்களுக்காகத்தான் அரசு, அரசுக்காக அல்ல மக்கள், என்பதை புரிந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் முதன்மையான வேண்டுகோள்.
செய்வார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்!
முந்தைய பதிவை படிக்க : Who is John McCarthy | யார் அந்த ஜான் மெக்கார்த்தி!