அன்புள்ளம் கொண்ட சமூக சொந்தங்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
தமிழகம் என்றாலே அதிமுக, திமுக என இரு கட்சிகள் தான் என்ற நிலை என்று மாறும் என வழி மேல் விழிவைத்து காத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணம் நிறைவேறும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
மது, ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, வஞ்சகம், துரோகம் என அனைத்தையும் இரு அரசியல் கட்சிகளும் மாறி மாறி செய்வதும் தேர்தல் காலங்களில் இலவசங்கள் என்று தமிழர்களை ஏமாற்றியும், சாராயத்தையும் பிரியாணியையும் கொடுத்து, பணத்தால் விலை பேசியும் தேர்தலை கேலிக்கூத்தாக்கி ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றி தமிழகத்தை உலக அரங்கில் கேவலமான நிலைக்கு தள்ளிய இந்த இரு கட்சிகளை மக்கள் முழுவதுமாக புறக்கணித்து ஒதுக்கி தள்ள வேண்டிய தருணம் இதுவே…
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தும் என்ன மாறிவிட்டது அடித்தட்டு மக்கள் அடித்தட்டு மக்களாகவே உள்ளனர். வறுமை ஒழிந்த பாடில்லை. நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை, ஆட்சி செய்தவர்களின் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்து, விண்ணை முட்டியும் ஆசை அடங்கவில்லை. 2ஜி என்ற பெயரில் ஊழல், வருமானத்துக்கு அதிகமாய் சொத்து சேர்த்தல் என்ற பெயரில் ஊழல் என எல்லா துறையிலும் ஊழல். ஊழலால் ஊதி பெருத்துவிட்ட திமுகவும் அதிமுகவும் இந்த நாட்டை ஆள தகுதியை இழந்து விட்டன.
பால் முதல் பல்பொடி வரை… பஸ் கட்டணம் முதல் கக்கூஸ் கட்டணம் வரை… மின்சாரம், அரிசி, பருப்பு, என அத்தியாவசியப்பொருட்கள் என அனைத்தும் ஒரு சாதாரன கூலித் தொழிலாளியால் அல்ல நடுத்தரவர்க்கத்தால் கூட வாங்க முடியாத அளவில் விலையேற்றம்… விலையேற்றத்திற்கு தகுந்தார்போல மக்களின் வருமானம் உயராத அவலம் என நீழும் துயரில் தமிழர்களின் வாழ்வை தள்ளி விட்டார்கள் அதிமுகவும், திமுகவும்… தமிழ் மண்ணில் எதிலும் மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை… ஆனால் 5 ஆண்டுகள் ஆட்சி செய்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்கின்றது…. அவர்களின் பொருளாதாரம் விண்ணை தொட்டு செல்கிறது…. அவர்களின் வங்கிக் கணக்குகள் நிறம்பிவழிகிறது…. அரசு கஜானா காலியாகி கடனில் மூழ்கி சீறழிகிறது…. தமிழ் சமூகம் இனியும் ஏமாறப்போகின்றதா என்பதே கேள்வி….
உண்மையான மக்களாட்சி எப்போது இத்தமிழ் மண்ணில் மலரும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். மக்களாட்சி என்பதற்க்கு வரைவிலக்கணம் ஆபிரகாம் லிங்கன் கூற்றுப்படி “மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி” என்ற அடிப்படையில் ஆட்சி அமைய வேண்டும். அப்போது தான் தமிழகம் தழைத்தோங்கும். மாறாக இந்த இரு கட்சிகளையே நம்பி முடங்கி கிடந்தால் நம்மை முடக்கி முடமாக்கி அவர்கள் தங்களை தாங்களே மேலும் வளமாக்கி கொள்வார்கள்.
இவர்களின் அராஜக ஆட்சியாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும், மது வளர்ச்சி கொள்கையாலும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். தமிழை வளர்க்க மாநாடு நடத்தும் இவர்கள் தமிழ் மக்களை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல மாட்டார்கள். உண்மையாக தமிழை வளர்க்க வேண்டுமானால் தமிழ் மக்களை வளமாக்கினால் தான் சாத்தியம். தமிழர்கள் அழிந்துவிட்டால் தமிழ் எங்கிருந்து வாழும்.
ஒரு நாள் சந்தோசத்திற்காக பிரியாணியையும், சாராயத்தையும் 500 அல்லது 1000 ரூபாய்களை இவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு ஓட்டளித்தால் 5 ஆண்டுகள் உங்கள் உழைப்பை சுரண்டி அவர்களின் வங்கிக்கணக்கை நிறைத்துக்கொள்வார்கள் என்பதை சமூகமும் உணர வேண்டும்.
வெள்ளம் ஏற்பட்டு தமிழகமே தத்தலிக்கும் இச்சூழலில் கூட நமக்கு உதவ மனமில்லாத இந்த அதிமுக அரசும், அதை குறை சொல்லிக்கொண்டு அரசியல் நடத்தும் திமுகவும் தமிழ் மண்ணிலிருந்து துடைத்தெரியப்படும் நாளே தமிழகத்திற்கு விடிவு நாள். தமிழ் மக்களுக்கு விடிவு நாள்.
ஊழலற்ற, இலஞ்சமற்ற, அதிகார துஷ்பிரயோகம் இல்லாத, அராஜகம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதால் நாமும் வளம் பெறுவோம், தமிழகமும் தலைத்தோங்கும், தமிழும் வளரும்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இத்தருணத்தை தவறவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே…
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்